Home / இன்றைய செய்திகள் / புதிய ஜனாதிபதிக்கு UN மற்றும் EU வாழ்த்து தெரிவிப்பு!!

புதிய ஜனாதிபதிக்கு UN மற்றும் EU வாழ்த்து தெரிவிப்பு!!

புதிய ஜனாதிபதிக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

கொழும்பில் உள்ள ஐ.நா.அலுவலகம் டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டு புதிய ஜனாதிபதிக்கு வாழத்துக்களை தெரிவித்துள்ளது.

ஜனதிபதி தேர்தலில் ஜனநாயக முறையில் மக்கள் வாக்களித்ததை ஏற்றுக்கொள்வதாகவும், சமாதானம், நல்லிணக்கம், மனித உரிமைகள், நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்களில் தொடர்ந்தும் இணைத்து கடமையாற்ற எதிர்பார்ப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

பல்வேறு துறைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நடத்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒருசில வன்முறை சம்பவங்களை தவிர தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாகவும் இலங்கை மக்கள் தமது அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் தேர்தலில் முழு அளவில் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா ஆர்வமாகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு படைகளின் மீள் கட்டமைப்பு, மனித உரிமை செயற்பாடுகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் மீண்டும் ஒருமுறை வன்முறை ஏற்படாத வண்ணம் புதிய ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீதி, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சீனா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

இதேவேளை, சிறய வன்முறை சம்பவங்களை தவிர ஜனாதிபதித் தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றதாக ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

வன்முறைகளற்ற சுதந்திர தேர்தல் செயல்முறை நன்கு நிர்வகிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மரிசா மத்தியாஸ் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்ப கட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: