கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றமே இன்று (19) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (19) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபர்களின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரான ஹேமசிறி பெர்ணான்டோவின் பெயரில் எவ்வித தனியார் அர்ரது அரச வங்கிகள் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பெயரில் 5 வங்கி கணக்குகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயங்கள் கருத்திற்கொண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.